அரிசி ஏற்றுமதியை நிறுத்துகிறதா இந்தியா..
உலகிலேயே அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் எல் நினோ விளைவு காரணமாக அதீத கனமழை மற்றும் அதித வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவிலும் குறிப்பிடத்தகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி பாதித்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பாஸ்மதி அரிசியைத் தவிர்த்து மற்ற அரிசி வகைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 80 விழுக்காடு அரிசி இந்தியாவிற்குள்ளேயே புழங்கும். இது இந்தியாவுக்கு நல்ல செய்தி என்றாலும் பிற நாடுகளுக்கு அத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறியிருக்கிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியாவில் உணவுப்பொருட்கள் விலை சராசரியாக 20 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. உலகளவில் இந்தியா அரிசி ஏற்றுமதியில் 40 விழுக்காடு பங்களிப்பை கொண்டுள்ளது.
கடந்தாண்டு நொய் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது. இதேபோல் கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கும் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.