1 பில்லியன் டாலர்ரை முதலீடு செய்யும் விப்ரோ…
இந்தியாவில் பெரிய டெக் நிறுவனங்களில் முன்னோடியாக இருக்கும் நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்று. இந்த நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, அனலிடிக்ஸ் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட துறைகளுக்காக இந்த தொகை செலவிடப்பட இருக்கிறது. புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது.
விப்ரோவின் போட்டி நிறுவனமாக கருதப்படும் டிசிஎஸ் 25,000 பொறியாளர்களை மைக்ரோசாஃப்ட் அசூர் ஏஐ நுட்பத்துக்கு தயார் படுத்தி வரும் நிலையில்,விப்ரோவும் யுத்தத்துக்கு தயாராகி வருகிறது. கடந்தாண்டு இறுதியில் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பம் உலகளவில் பிரபலமடைந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். விப்ரோ நிறுவனம் விப்ரோ ஏஐ360 என்ற செயற்கை நுண்ணறிவு சூழலை உருவாக்கி வருகிறது.இந்த புதிய முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு நுட்ப பயிற்சியை 2லட்சத்து 50ஆயிரம் பொறியாளர்களுக்கும் கற்றுத்தர விப்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சி என்பது அடுத்த 12 மாதங்களில் செய்ய விப்ரோ முடிவு செய்திருக்கிறது.
அனைத்துத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்த முனைப்பு காட்டி வருவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியர்ரி டெலபோர்ட்டே தெரிவித்துள்ளார்.