நிபுணர் குழு அறிக்கையை மறுத்துள்ள செபி..
அதானி குழுமம் என்ற மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தின்மீது கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு புகாரை வெளியிட்டது. அதில் விதிகளை மீறி பங்குச்சந்தைகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சரமாரியாக சாடியது. இந்த சூழலில் இது தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கைத் தொடர்ந்து நிபுணர்கள் குழுவை உச்சநீதிமன்றமே அறிவித்தது. இந்த குழு முதல்கட்டமாக அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தவறு நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஆனால் பொதுவான ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும்,வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்து தெளிவில்லை என்றும் முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் அந்த நிபுணர்கள் குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அலசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பங்குச்சந்தைகளில் பல ஆண்டுகளாக விதிகள் மாற்றப்பட்டுள்ளதையும் நிபுணர்கள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இதனை ஏற்க மறுத்துள்ள செபி அதிகாரிகள், தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கடுமையான விதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், பங்குச்சந்தைகளில் பங்கு விலைகள் மாற்றம் என்பது இயல்பான ஒன்று என்றும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கட்டாயம் தண்டனை அளிக்கப்படும் என்றும் செபி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி நிபுணர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில், விசாரிக்க கூடுதல் அவகாசம் தரவேண்டும் என்று செபி தரப்பு நிபுணர்களை அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கம் சீர்குலைய வாய்ப்பிருப்பதாகவும் செபி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.