ஆப்படித்த ஆன்லைன் செயலிகள்..!!
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போன் பேசவே பல ரூபாய் கட்டணம் இருந்தது. பின்னர் போன் பேசுவது எளிதானது ஒரு ரூபாய் இருந்தால் இந்தியா முழுக்க எங்குவேண்டுமானாலும் பேசலாம் என்ற திட்டம் இருந்தது. ஆனால் தற்போது இணைய வேகம் அதிகமான நிலையில் சிம்கார்டு நிறுவனங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது சிம்கார்டுகளை மக்கள் பயன்படுத்தும் விதம் தலைகீழாக மாறியுள்ளது. அதாவது டேட்டாவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 2013 முதல் 2022 வரை 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் செல்போனில் வாய்ஸ் கால் பேசுவோரின் எண்ணிக்கை 80 விழுக்காடு சரிந்துள்ளது. எஸ்எம்எஸ் வழியாக பேசுவோரின் எண்ணிக்கை 94விழுக்காடு குறைந்திருக்கிறது என்கிறது டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். வாட்ஸ்ஆப், கூகுள் மீட், பேஸ்டைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களும், சமூக வலைதலங்களும் வந்த பிறகு சக மனிதர்கள் செல்போனில் பேசுவதை விட இணைய காலிங்தான் அதிகம் செய்வதாக அந்த தரவு தெரிவிக்கிறது. மேலும் 2013ஆம் ஆண்டு 8.1விழுக்காடாக இருந்த தனிநபரிடம் இருந்து டேட்டாவுக்காக நிறுவனங்கள் பெறும் வருமானம் தற்போது 85.1 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. ஓடிடி தளங்களை கட்டுப்படுத்தினால் அதன்மூலம் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் டிராய் தனது யோசனையை முன்வைத்துள்ளது. தவிர்க்க முடியாத அவசர நேரங்களில் மொத்த இணையத்தையும் துண்டிப்பதைவிட தனிப்பட்ட சில செயலிகளை மட்டும் துண்டிக்கலாம் என்பது குறித்தும் நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய்ந்து வருகிறது. இதில் உள்ள பாதுகாப்பு குறைகள் குறித்தும் டிராய் ஆராய்ந்து வருகிறது.