ஆப்பிளின் வளர்ச்சியும் இந்தியாவும்!!!
உலகளவில் மிகமுக்கிய பிராண்டுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் செல்போன்கள், கணினிகள் என அனைத்துக்கும் உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு, இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பங்கு மிகமுக்கியமான இடத்தில் இருக்கும் என்று பிரபல நிறுவனமான மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மிக அதிகமாக இருப்பதாக கூறியுள்ள அந்நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துக்கு முதலிட்டத்தை தந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் வெறும் 6 விழுக்காடு மட்டுமே இந்தியா அளித்து வந்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் 15 விழுக்காடாக உயரும் என்றும் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய பொருட்களை சந்தையில் விற்கும் என்றும் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விற்பனை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. இந்தியாவில் ஐபோன்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சீனாவுக்கு ஆப்பிள் நிறுவனம் எந்தளவுக்கு முக்கியமாக இருந்ததோ அதே அளவு முக்கியத்துவம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மேமாதம் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்களை 500 மில்லியன் டாலர் அளவுக்கு தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த ஆலை மூலம் தெலங்கானாவில் 25 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ்கான் நிறுவனம்தான் ஏர்பாட்ஸ்களை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது. தெலங்கானாவைப் போலவே பெங்களூருவிலும் 37 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிலத்தை பாக்ஸ்கான் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..