வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க பெடரல் ரிசர்வ்..
வல்லரசு நாடான அமெரிக்கா உலகளவில் பொருளாதாரத்தில் மிகச்சிறப்பான நிலையில் இருக்கிறது. சீனாவுடன் போட்டியிடக்கூடிய ஒரே நாடு என்றால் அது நிச்சயம் அமெரிக்கா மட்டுமே. இந்த நிலையில் அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வங்கிகளுக்கு மத்திய வங்கி வழங்கி வரும் கடன்களின் வட்டி விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த வட்டி விகிதம் கடந்த ஜூன் மாதத்தில் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் ஜூலை மாதத்துக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது 5.25 %ஆக இருந்த வட்டி விகிதம் ஜூலை மாத பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் 5.50ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக கடந்த 2001ஆம் ஆண்டுக்கு பிறகு பெடரல் ரிசர்வ் தனது வட்டியை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. இன்னும் கூட வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்ட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் விலைவாசி உயர்வு 2 விழுக்காடாக கொண்டுவர அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது. 22ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி என்ற FOMC குழு, கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்த இசைவு தெரிவித்து ஏக மனதாக தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் உலகளவில் சந்தைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.