ஜோபைடனின் ஜோரான திட்டம்…
அமெரிக்கா,சீனா ஆகிய இரண்டு நாடுகளும் உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்களிப்பை செய்யும் நாடுகளாகும். இவற்றில் யார் பெரியவர்கள் என்ற போட்டி பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் சீனாதான் பெரிய நாடாக கருதப்படுகிறது. ஆனால் உலகையே தன் கையில் ஆட்டிப்படைக்கும் அதிகாரம் அமெரிக்காவிடம் இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனாவில் பயன்படுத்த தடைவிதிக்கும் புதிய ஆணையை அமெரிக்க அதிபர் பைடன் செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்க டெக் நிறுவனங்கள் சீனாவில் முதலீடுகள் செய்ய இயலாது.இதற்கான ஆணை ஆகஸ்ட் பாதியில் செயல்படுத்த வாய்ப்பிருப்பதாக பிரபல புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க முதலீடுகள் என்றால் அவை செமிகண்டக்டர்கள்,செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்பியூட்டிங் உள்ளிட்ட துறைகளைத்தான் குறிக்கும். செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனா முன்னோடியாக திகழும் சூழலில் அதில் அமெரிக்க தொழில்நுட்பங்கள் நீக்கப்படும்பட்சத்தில் அது சீனாவுக்கு பாதகமாக அமைந்துவிடும்.இதன் மூலம் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எனினும் ஏற்கனவே கையெழுத்தாகி நடைமுறையில் உள்ள முதலீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இவர்கள் போட்டியில் பல ஆயிரம் டெக் பணியாளர்களின் வேலைவாய்ப்புகள் வேறு நாடுகளுக்கு செல்லவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.