அசுர பலமாகும் ஜியோ நிறுவனம்…
கடந்த மே மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனத்துக்கு புதிதாக 30.4 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்திருக்கின்றனர் என்கிறது தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். இதே மாதம் ஏர்டெல் 13.3 லட்சம் வாடிக்கையாளர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டுள்ளது. மே மாதத்தில் மட்டும் வோடஃபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் 28 லட்சம் பேரை இழந்துள்ளது. மத்திய அரசின் தரவுகளின்படி ஜியோ நிறுவனத்துக்கு 43கோடியே 60 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்துக்கு 37.2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வோடஃபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 23 கோடி பேர் இருக்கின்றனர்.
ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 84.2 கோடி ஆக அதிகரித்துள்ளது. 10 மாதங்களுக்குள் 3லட்சம் 5ஜி டவர்கள் வைக்கப்பட்டுள்ளதாக அந்த துறைக்கான அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 714 மாவட்டங்களில் 5ஜி சேவை கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு அக்டோபரில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது.இந்தியாவில் இப்போது வரை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவை தற்போது அளித்து வருகின்றன.