தற்போதைய நிலையே தொடர வாய்ப்பு…
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருவது பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு.இதனை இந்தியாவில் சமாளிக்க ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் விலைவாசி கட்டுக்குள் வந்த நிலையில் அண்மையில் பெய்த மழை மற்றும் கடும் வறட்சி காரணமாக கடன்களுக்கான வட்டி விகதங்களில் மாற்றம் செய்யப்படாமல் சில காலத்துக்கு ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்திருந்தது. இந்த சூழலில் மீண்டும் விலைவாசி கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட வட்டி விகிதம் அப்படியே தொடர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் வரும் 8 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை வரும் 10ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிக்க இருக்கிறார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனான ரெபோ விகிதம் 6.5%ஆக இருக்கிறது.உலகளவில் நிலவும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஆறரை விழுக்காடாகவே கடன்கள் மீதான வட்டி விகிதம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 2-3 காலாண்டுகளுக்கு இதே நிலை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட அடிப்படை உணவுப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்க அளவு என்பது 4.81%ஆக உயர்ந்திருக்கிறது.வரும் 14 ஆம் தேதி இதன் அடுத்த கட்ட தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது.. கடந்த முறை நிதி கொள்கை கூட்டம் ஜுன் 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிதி கொள்கை கூட்டத்தில் 3 பேர் ரிசர்வ் வங்கியிலும், 3 பேர் வெளி நபர்களும் இடம்பிடிப்பார்கள், தற்போதைய நிலையே தொடரும்பட்சத்தில் வீடு,வாகன கடன்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே தொடரும், ஒருவேளை ரெபோவிகிதம் உயர்த்தப்பட்டால் இவை மேலும் உயரவே அதிக வாய்ப்பு ஏற்படும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.