நகை செய்வதிலும் நாங்க தான் கில்லி!!!
உப்பு முதல் மேலே பறக்கும் விமானம் வரை டாடா நிறுவனம் கால்வைத்த எந்த துறையும் சோடை போகவில்லை. இந்த நிலையில் டைட்டன் என்ற நிறுவனம் டாடாவுக்கு லாபத்தை அள்ளித்தரும் பிரிவாக மாறியுள்ளது. இது குறித்து டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வெங்கடராமன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உலகின் பல நாடுகளுக்கு நகை உற்பத்தி தொழிற்சாலையாக இந்தியா மாறியுள்ளதாக கூறியுள்ளார். மும்பையில் அண்மையில் நடந்த நகை கண்காட்சிக்கு பிறகு பேசிய அவர், தங்க நகைக்கான மோகம் அதிகரித்துள்ளதாகவும், வரும் பண்டிகை காலங்களில் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படி இருந்தும் அதிக தங்கம் வாங்குவதில் சீனா நமக்கு முன்னோடியாக இருக்கிறது. ஆமாம் உலகளவில் 2021ஆம் ஆண்டு தங்க நகை வாங்கிய தரவுகளின்படி, சீனா 673 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் இந்தியா 611டன் தங்கம்தான் இறக்கியுள்ளது. திருமண நகைப்பிரிவுதான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.முன்பு இருந்ததைவிட தற்போது தங்கம் இலகுவான எடை கொண்ட டிசைனைத்தான் மக்கள் அதிகம் விரும்புவதாகவும் வெங்கடராமன் கூறியுள்ளார். நிலைமை இப்படி இருந்தாலும் தங்க நகை டிசைன் துறையில் இந்தியாவுக்கு இன்னும் அதிக கவனம் தரவேண்டும் என்றும் அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புதுப்புது வடிவமைப்பு டிசைன்கள் மூலம் நீண்ட காலத்துக்கு தங்கத்தை மக்களை வாங்க வைக்க முடியும் என்கிறார்கள் நகை வடிவமைப்பாளர்கள்