பி எல் ஐ திட்டத்துக்கு 13,000 கோடி …
இந்தியாவில் பல்வேறு துறை சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு அண்மையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களுக்கு தற்போது போதிய அளவு வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனை வலுப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் மட்டும் 13,000 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க அதிக அவகாசம் தரப்பட்டு இருந்தது. தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் செயலர் ராஜேஷ்குமார் சிங்க இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி இந்தாண்டு முதல் ஊக்கத் தொகை அளிக்கும் அளவு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
மார்ச் 2023 வரை மட்டும் 2,900 கோடி ரூபாய் நிதி 14 துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.3,400கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு தொலைதொடர்பு, மருந்து,ஸ்டீல் உள்ளிட்ட 14 துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 1.97 லட்சம் கோடி ரூபாய் அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.எப்போது முழு தொகைவிடுவிக்கப்படும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதனை தற்போது தெரிவிக்க இயலாது என்று பதில் அளித்தார். அதிநவீன ரசாயன செல்கள்,துணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் விண்ணப்பங்களை சரிபார்ப்பது,விசா சார்ந்த பிரச்னைகளுக்கு மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.சீன தயாரிப்புகளுக்கு மாற்றாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 733 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 176 எம்.எஸ்எம்.இ நிறுவனங்கள் இதன் பயனை பெற்றுள்ளனர். 78 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும்,6லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாகவும் சிங் தெரிவித்துள்ளார். 2லட்சத்து 60 ஆயிரம் ககோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இந்த திட்டம் உதவியுள்ளதாக சிங் தெரிவித்துள்ளார்.