பஞ்சம் வராமல் காக்க அரிசி கொடுங்க !!!
பாஸ்மதி அல்லாத மற்ற அரிசி ரகங்கள் வருங்காலங்களில் ஏற்பட இருக்கும் பற்றாக்குறையை சமாளிக்க அண்மையில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இந்த நிலையில் வரும் பண்டிகை காலங்களில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க தங்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரையை வழங்க வேண்டும் என்று நேபாள அரசு இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. 10 லட்சம் டன் நெல், 1 லட்சம் டன் அரிசி மற்றும் 50ஆயிரம் டன் சர்க்கரை தேவை என்று நேபாளம் கோரியிருப்பதாக வர்த்தகத்துறை இணை செயலாளர் ராமச்சந்திர திவாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அரிசி மற்றும் சர்க்கரை தட்டுப்பாடு பெரிய அளவில் இல்லை என்று கூறியுள்ள திவாரி, பண்டிகை காலங்களில் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி பதுக்கல் செய்யும் வணிகர்களையும் எச்சரித்துள்ளார். வழக்கமாக அக்டோபர்-நவம்பர் காலகட்டங்களில் நேபாளத்தில் பண்டிகை காலமாகும். இந்தியா கடந்த 20ஆம் தேதி திடீரென அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் நேபாளத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கவே தங்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரையை வழங்க நோபாளம் கோரியுள்ளது. உணவுப்பொருட்களுக்கு நேபாளம் இந்தியாவைத்தான் அதிகம் நம்பியிருக்கிறது.இந்தியாவில் இருந்து ஓராண்டுக்கு நேபாளம் 14 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்கிறது. 19000டன் பாஸ்மதி அரிசியையும் நேபாளம் இறக்குமதி செய்கிறது. இந்தியா தடையை அறிவித்ததும் நேபாளத்தில் அரிசி விலை உள்ளூர் பணத்தில் ஒரு சிப்பத்துக்கு 250 நேபாள ரூபாய் அதிகரித்துள்ளது. பண்டிகை நேரத்தில் விலை இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தக்காளி விலை அதிகம் இருந்த நேரத்தில் தக்காளியை இந்தியா நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்தது. இதே நிலை தற்போது நேபாளத்துக்கு அரிசியில் ஏற்பட்டுள்ளது.