வெங்காயம் ஏற்றுமதி செய்தால் 40% கூடுதல் வரி..
இந்தியாவில் அண்மையில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்தது போல நிலைமை வெங்காயத்துக்கு வரக்கூடாது என்று மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்தால் அதற்கு 40விழுக்காடு கூடுதல் ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த வரி விதிப்பு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வெங்காயத்தின் விலை உச்சம் தொடும் என்று பலதரப்பினரும் எச்சரித்ததை அடுத்து இந்த வரி விதிப்பை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி முதல் மத்திய தொகுப்புகளில் இருந்து வெங்காயத்தை அரசு விடுவித்து வருகிறது. இதுவரை மத்திய அரசிடம் 3 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு இருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு,கடந்தாண்டு 2 லட்சத்து 51 ஆயிரம் டன் வெங்காயத்தை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது. வெங்காய விலை உயரும்பட்சத்தில் அதனை சமாளிக்க போதுமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில மாநிலங்களில் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. திறந்தவெளி சந்தையில் அரசு வெங்காயத்தை விற்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 65விழுக்காடு இந்தியாவின் வெங்காய உற்பத்தி இருக்கும்.இதேபோல் மீத வெங்காயம் அக்டோபர்-நவம்பர் காலகட்டத்தில் கிடைக்கும். இந்த சூழலில் பல மாநிலங்களில் கனமழை மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கும், தனிப்பட்ட முகவர்கள் வாயிலாகவும் வெங்காயம் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.