முருகப்பா குடும்ப பஞ்சாயத்து முடிஞ்சதாம்பா..!!!
இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக முருகப்பா குழுமம் உள்ளது.இந்த குழுமம் எக்கச்சக்கமான வியாபாரங்களை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறது. இந்த நிலையில் அதன் உரிமையாளரான எம்.வி முருகப்பன் இறந்தபிறகு அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இடையே சொத்துக்காக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த சூழலில் வள்ளி அருணாச்சலம் மற்றும் வெள்ளச்சி முருகப்பன் ஆகியோர் தரப்புடன் சமரச முயற்சி வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர்களுடன் எந்த சொத்து தகராறும் இல்லை என்றும்,அவர்களுக்கு அளிக்க வேண்டியவற்றை செட்டில் செய்துவிட்டதாகவும் முருகப்பா குழுமம் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று இருதரப்பினரும் தங்கள் ஆலோசகர்களுடன் அமர்ந்து பேசியதாகவும், அடுத்த 90 நாட்களுக்குள் யாருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவும் முருகப்பா குழுமம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதை அடுத்து நீதிமன்றங்களில் தொடுத்திருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உரிய பணம், சொத்துகள் செட்டில் செய்யப்பட்டுள்ள நிலையில் குழுமத்தின் மொத்த உரிமையும் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் இல்லை.கார்போரண்டம், சோலமண்டலம் உள்ளிட்ட 11 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பழையபடி முருகப்பா குழுமத்திலேயே இயங்க இருக்கின்றன. இந்த முயற்சிக்கு அந்த குழுமத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் நல்லவரவேற்பு அளித்து வருகின்றனர். பரஸ்பரம் சமாதானம் அடைந்துவிட்டனரா இல்லை பூர்விக உயில்படி சொத்து எழுதப்பட்டுள்ளதா என்று இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை, 74,200 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட முருகப்பா குழுமம் 1900ஆம் ஆண்டுகளிலேயே மிகப்பிரபலமானதாகும்.உலகம் முழுவதும் 29 நாடுகளுக்கு வணிகத்தை அந்த குழுமம் செய்து வருகிறது.முருகப்பா குழுமத்தில் 73,000பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.ஆடை, ரப்பர்,விவசாயம்,பொறியியல்,நிதித்துறை,கட்டுமானத்துறை என பல்வேறு துறைகளில் முருகப்பா குழுமம் ஆலமரம்போல பரந்து விரிந்துள்ளது என்றால் அது மிகையல்ல.