அடுத்தமாதம் நல்ல சேதி வருதாம்…!!
தக்காளி கிலோ 200 என்றதும் லபோ திபோவென அடித்துக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த சேதி சற்று ஆறுதல் தரலாம்..அடுத்த மாதம் காய்கனிகள் விலை கணிசமாக குறையுமாம்,இதைநாங்கள் சொல்லவில்லை,நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் சொல்லி இருக்கிறார்.காய்கனிகள் விலை குறையும் என்றபோதிலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் ஆருடம் கூறியிருக்கிறார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும் அதற்காக கலால் வரியை குறைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றும் அந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.உள்கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு செய்து வரும் செலவுகளின் அளவு என்பது செப்டம்பர் மாத இறுதியில் 50%ஐ எட்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சராசரியாக 6%குறைவான மழைப்பொழிவு காணப்பட்டதால் விதைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காகத்தான் ஏற்கனவே அரிசி,சர்க்கரை,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவத்தார். உக்ரைன்-ரஷ்யா போரின்போது உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியது போல நடக்கக்கூடாது என்பதற்காகவும்,விலைவாசி உயர்வில் இருந்து இந்திய மக்களை காப்பாற்றவும்தான் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த நிதித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் 4.87%ஆக இருந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.44விழுக்காடாக உயர்ந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், கச்சா எண்ணெய் விலை தற்போதுள்ளது ஓரளவுக்கு சமாளிக்கும் அளவுக்குத்தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.பட்ஜெட் போடும்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 75 டாலர்களாக இருந்ததாக கூறியுள்ள அவர், தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 90 டாலர்களாக இருக்கிறது என்றார்.