பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு நிபந்தனையுடன் அனுமதி..
இந்தியாவில் சில முக்கியமான மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இதற்குள் இந்தியாவில் நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம் என்று பேசி வாக்கு கேட்கவே சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக அண்மையில் பாஸ்மதி இல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பாஸ்மதி அரிசிக்கும் கட்டுப்பாடு வந்துவிட்டது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்ய சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.அதாவது, குறைந்தபட்சம் 1,200 டாலர் என்ற விலையில் ஒரு டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யலாம், அதற்கும் குறைவாக முடியாது.புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் 20% வரி விதிக்கப்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் பாஸ்மதி அரிசிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உலக அரிசி விற்பனையில் இந்தியாவின் பங்கு மட்டும் 40%ஆக இருக்கிறது. அதிலும் பாஸ்மதி இல்லாதமற்ற ரக அரிசியின் பங்களிப்பு 80 %ஆக இருக்கிறது. பாஸ்மதி இல்லாத மற்ற ரக அரிசியை பாஸ்மதி அரிசி என்று லேபிள் ஒட்டி ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. பாஸ்மதி அரிசியின் தேவை 5 முதல் 7 விழுக்காடு அதிகரித்துள்ள சூழலில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. தற்போது வரை கலப்படம் செய்யப்படாத பாஸ்மதி அரிசி 1,100 டாலரில் இருந்து 1,300 டாலராக ஒரு டன் உள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்ச விலையாக 1,200 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல் நினோ விளைவு காரணமாக பல மாநிலங்களில் அதிக கனமழையும், சில மாநிலங்களில் லேசான மழையும் பதிவாகியுள்ளன. தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் அரிசியைவிட இப்போதும் இந்திய அரிசி விலை குறைவு என்கிறார்கள் நிபுணர்கள், ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை மட்டும் 1.86 மில்லியன் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு நடக்கும் ஏற்றுமதியைவிட 9.35% அதிகமாகும்.மொத்த அரிசி ஏற்றுமதியான 22 மில்லியன் டன் அரிசியில் பாஸ்மதி அரிசியின் அளவு மட்டும் 4.56 மில்லியன் டன் என்கிறது வர்த்தகத்துறை அமைச்சகம்.