2,826 டன் வெங்காயம் கொள்முதல்..
தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பான NCCF கடந்த 26ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் ஒரு குவிண்டால் வெங்காயம் 2,410 ரூபாய் என்ற விலைக்கு 2,826 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து இந்த வெங்காயம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மத்திய அரசு எப்போதும் சேமித்து வைக்கும் 3 லட்சம் டன் வெங்காயத்துக்கு பதில் இந்தாண்டு 5 லட்சம் டன் அளவுக்கு சேமித்து வைத்துள்ளது. உள்நாட்டு விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், சந்தையில் போதுமான அளவுக்கு வெங்காயம் கிடைக்கவும் ஏதுவாக இந்த முயற்சியை மத்திய அரசு செய்திருக்கிறது.NCCF, NAFED ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்த கொள்முதலில் ஈடுபட்டுள்ளன. டெல்லி மற்றும் நாட்டின் சில பகுதிகளில் மத்திய அரசின் இந்த நேரடி விற்பனையானது ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் இருந்தே அதிகளவு வெங்காயம் வாங்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதற்கென 12 முதல் 13 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா,ஒடிஷா,அசாம் மற்றும் டெல்லி உள்ளிட்ட 11 மாநிலங்களில் நேரடி மொத்த வெங்காய விற்பனையில் மத்திய அரசு ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மானிய விலையாக ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் 40 விழுக்காடு ஏற்றுமதி வரியை கடந்த 19ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.