ஒருவேளை விதிமீறல் நடந்து இருக்குமோ?
அதானி குழும நிறுவன பங்குகள் குறித்து அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட புகார் தொடர்பாக செபி தனியாக ஒரு விசாரணையை நடத்தியது. அதில் சில விதிமீறல்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல்வெளியாகியிருக்கிறது. கடந்த ஜனவரியில் குற்றச்சாட்டு வந்த உடன் தாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்று அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சில விதிமீறல்கள் இருப்பதாகவும் அவற்றிற்கு சில அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் விவரம் அறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை செபி அதிகாரபூர்வமாக இந்த விவகாரத்தில் எந்த அறிவிப்பையும் பொதுவெளியில் வெளியிடவில்லை. தொடர்புடைய நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்தும் சில விஷயங்களை கண்டுபிடித்திருப்பதாக கூறப்படுகிறது.13 விதிமீறல்களுக்கு வாய்ப்பிருப்பதாகவும் அதுவும் அபராதத்துடன் கூடிய விதிமீறல்களாக இருப்பதாகவும் ஒவ்வொரு விதிமீறலுக்கும் தலா 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்றும் விவரம் அறிந்தநபர் தெரிவிக்கிறார். அதாவது இந்திய விதிப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் எந்த ஆவணங்களும் இன்றி 10% பங்குகளை மட்டுமே முதலீடாக செய்ய முடியும் ஆனால் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. தற்போது பிரச்னை யாதெனில், ஆவணங்கள் இன்றி 10விழுக்காட்டுக்கும் அதிக முதலீடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. புகார்கள் பெரிய அளவில் இருந்தால் அபராதம் மட்டுமின்றி, பங்குச்சந்தையில் இருந்தே சில நிறுவனங்களை நிரந்தரமாக தடை விதிக்கவும் விதிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது நடந்திருப்பதாக கூறப்படும் விதிமீறல் எத்தகையது,எவ்வளவு அபராதம்,அல்லது எவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதை செபி அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.