இ-காமர்ஸ், உணவு டெக் நிறுவனங்கள் வசூல் வேட்டை?
இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை என்பார்கள் அதனை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது உண்டு,அந்த வகையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள்,மின்னணு வணிக நிறுவனங்கள் தற்போது தள கட்டணம்,கன்வீனியனஸ் கட்டணம்,என புதுப்புதுப் பெயர்களை வைத்து வருகின்றனர். முதலில் இதனை புக்மைஷோ நிறுவனம் தொடங்கியது இது தற்போது அஜியோ, ரிலையன்ஸ் ரீட்டெயில் உள்ளிட்ட நிறுவனங்களும் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. முன்னதாக நைக்கா நிறுவனமும் இதே பாணியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பெற்றது.மிந்த்ரா நிறுவனமும் இதனை பின்பற்றியது. ஒரு நபர் ஆர்டர் செய்யும் தொகையில் சராசரியாக அரை முதல் 1 விழுக்காடு அளவுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.நைக்கா நிறுவனம் சராசரியாக ஒரு நபர் வாங்கும் பொருளின் விலை 4,413 ரூபாயாக இருப்பதாக கூறியுள்ளது. இது தற்போது 29 ரூபாய் தள கட்டணத்தை வசூலிக்கிறது. மிந்த்ரா இணையதளம் சராசரியாக 1,400 ரூபாயாக ஒரு வாடிக்கையாளர் பொருள் வாங்குவதாக கூறிய நிலையில் கட்டணமாக 15 ரூபாய் வசூலிக்கிறது. தொடர்ந்து ஆன்லைனிலேயே பொருட்களை வாங்கிப்பழகிய மக்களுக்கு இந்த கட்டணம் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. பல ஆண்டுகளாக இலவசமாகவே பொருட்களை வாங்கிப்பழகியவர்களுக்கு இந்த சந்தா கட்டணம் எதற்கு என்ற கேள்வி கேட்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோரை நிபுணர்கள் இரண்டாக பிரிக்கின்றனர். காசு கூட இருந்தாலும் வீடுதேடி பொருள் வந்துவிடுகிறதே என்பவர்கள் ஒரு ரகம் என்றும்,வெறும் தள்ளுபடிக்காகவே ஆன்லைன் பக்கம் வருவோர் மற்றொரு ரகம் என்றும் வகை படுத்துகின்றனர். உடை மற்றும் பேஷன் சார்ந்த துறைகளில் இருப்போர்,அளவு பொருந்தவில்லை என்று ரீபண்ட் செய்வதில் உள்ள சிக்கல்களுக்காக பணத்தை வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.ஸ்விகி நிறுவனம் கடந்த ஏப்ரலில் வெறும் 2 ரூபாயை தள கட்டணமாக வசூலித்து வந்தது.இப்போது அது 5 ரூபாயாக அதிகரித்துள்ளது. சொமேட்டோ நிறுவனமும் ஆகஸ்ட் முதல் தள கட்டணம் வசூலிக்கத் தொடங்கியிருக்கிறது. சொமேட்டோ நிறுவனம் ஜூன் வரையிலான கடந்த 3 மாதத்தில் மட்டும் 17.6 கோடி ரூபாய் ஆர்டர்களை பெற்றுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 20 லட்சம் ஆர்டர் கிடைக்கின்றன. கூடுதலாக ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் என்றாலும் ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் சொமேட்டோ நிறுவனத்துக்கு கிடைக்கிறது.