இனி பணத்தை அனுப்ப குரல் போதும்..!!
கடந்த 2016-17 காலகட்டத்துக்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அப்போது முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு உதவியாக இருப்பது UPI எனப்படும் நுட்பம்.இந்த நிலையில் யுபிஐயில் புதிய வசதி விரைவில் வர இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். புதிய திட்டத்துக்கு ஹலோ யுபிஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குரல் மூலம் பணம் அனுப்பும் திட்டத்தை தேசிய பண பரிவர்த்தனை கழகமான NPCI வடிவமைத்துள்ளது.இது தற்போதுள்ள செயலிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் அப்படியே மேம்படுத்தும் வகையில் ஹலோ யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. போன் செய்து பேசும் வகையிலும்,செயலியில் பேசும் வகையிலும் என இரண்டு பிரிவுகளாக இந்த செயலி இயங்கும்.ஒரு கேஸ் சிலிண்டரை எப்படி IVRமூலம் புக் செய்கிறோமோ அதே பாணியில் இனி பணத்தை அனுப்ப இயலும்.நீங்கள் பேசும் மொழியை செயற்கை நுண்ணறிவு நுட்பம் உள்ளீடாக எடுத்துக்கொள்ளும்.மிஷின் லர்னிங்,ஜெனரேட்டிவ் ஏஐ,NLP ஆகிய நுட்பங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் குரல்கள் சேகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. எந்த மொழியில் பேசினாலும் அதனை அங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கு தகுந்தபடி செயற்கை நுண்ணறிவு நுட்பம் கணினியின் உதவியுடன் பதில் அளிக்கும். சரிபார்ப்புகள் முடிவடைந்ததும், மனிதர்கள் செல்போன்களில் எதிர்முனையில் பேசுவதைப்போலவே, உங்கள் பரிவர்த்தனை குறித்த விவரங்களை கணினி கூறிவிடும், இவை அனைத்தும் சில நொடிகளில் நடக்கும் என்பதே ஆச்சர்யம். முதல்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இந்த வசதி அறிமுகமாக இருக்கிறது.விரைவில் மற்ற மொழிகளிலும் இந்த வசதி இயங்க இருக்கிறது. இணைய வசதி இல்லாத செல்போன்களிலும் அமலாகும் வகையில் மிஸ்டுகால் கொடுத்தால் பதிலுக்கு உடனே அழைக்கும் புதிய நுட்பத்தையும் NPCI பரிசோதித்து வருகிறது. இணைய வசதி இல்லாத கிராமபுற மக்களுக்கு இந்த சேவை பேருதவியாக இருக்கும் என்றுஇதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஓராண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் மக்களுக்கு இந்த சேவை மையப்படுத்தப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.