புதிய உற்பத்தி மையமாகிறது இந்தியா-சொல்கிறார் பிரபலம்
தைவானை மையமாக கொண்டு இயங்குகிறது ஹோன்ஹாய் அதாவது பாக்ஸ்கான் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யங் லியூ அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தார்.அதன் பிறகு இந்தியாவை மிகவும் பிடித்துப்போன அவரிடம் இருந்து ஒரே பாராட்டு தான் வருகிறது. அவர் அண்மையில் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார்.அதில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்வதாகவும் வருங்காலங்களில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சீனா உற்பத்தி கட்டமைப்பை வலுப்படுத்த எடுத்துக்கொண்ட நேரத்தைவிட இந்தியாவுக்கு குறைவான நேரமே தேவைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நிறைய மின்னணு பொருட்கள் உற்பத்தி நடப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஐடி துறை என்றால் இந்தியா-தைவான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதை நினைவூட்டிய யங்,ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் பாக்ஸ்கானின் தொழிலாளர்கள் எண்ணிக்கை, முதலீடுகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக சிலாகித்துள்ளார். மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள இணக்கமான சூழல் காரணமாக இன்னும் அதிக உற்பத்தியை செய்ய இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகம்,தெலங்கானாவில் இந்த நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.