டீசலுக்கு பாய் சொல்லுங்க இல்லன்னா…கட்கரி காட்டம்…
இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் பெரும்பாலும் டீசலில்தான் இயங்குகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு போராடி வருகிறது. இந்த சூழலில் டீசல் வாகனங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவில்லை என்றால் அந்த வகை வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை அதகரிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
63 ஆவது சியாம் எனப்படும் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சங்க கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கட்கரி,டீசல் வாகனங்கள் உற்பத்தியை படிப்படியாக குறைக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் அதிக வரிவிதிப்பதுதான் ஒரே வழி என்றும் கூறியுள்ளார் அப்படி வரியை உயர்த்தினால் அது கார்களின் விற்பனைக்கு பெரிய சிக்கலாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார். தற்போது உள்ளதைவிட 10%கூடுதலான வரியை விதிக்க நேரிடும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.டீசலை எரிப்பதால் ஏற்படும் அபாயகரமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறிய அவர், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பசுமை எரிபொருள் தயாராகும் வரை இதனை பின்பற்ற வேண்டும் என்றார். தற்போது வரை ஒரு ஆட்டோமொபைல் வாங்கினால் 28% GSTயும், 1 முதல் 22% செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.SUV ரக கார்கள்தான் அதிகபட்சமாக 28%ஜிஎஸ்டியை ஈட்டுகிறது.மேலும் 22% செஸ் வரியும் இந்த வகை கார்களுக்கு விதிக்கப்படுகிறது. டீசலை நச்சு வாயு என்று குறிப்பிட்ட அமைச்சர் கட்கரி,வேறு வழியில்லாமல் வெளிநாடுகளில் இருந்து டீசலை அதிகளவில் இறக்குமதி செய்வதாக கூறியுள்ளார். 2014-ல் 53%ஆக இருந்த டீசல்கார்களின் விற்பனை தற்போது 18%ஆக குறைந்திருப்பது நல்ல அறிகுறி என்றார். எத்தனால்,பசுமை ஹைட்ரஜன்,மின்சார கார்களை உற்பத்தி செய்ய இந்திய கார் தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.மாருதி சுசுக்கி, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் டீசலில் இயங்கும் கார்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.