டிமாண்ட் இருக்க வரைக்கும் டீசல் வண்டி தயாரிப்போம்..
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க படிம எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகளும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் இதற்கான பணிகளை நிதியமைச்சகமும் செய்து வருகிறது.இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி சைலேஷ் சந்திரா , டீசல் இன்ஜின் குறித்து தனது கருத்தை தெரிவித்து வருகிறார். பிஎஸ் 6 ரக விதியை பின்பற்றி டீசல் இன்ஜின் தயாரிப்பது சவாலாக இருப்பதாக சைலேஷ் கூறியுள்ளார்.இந்தியாவில் பண்டிகை காலம் வந்துள்ளதால் அதிக வாகன விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே டாடாவின் நெக்சான், பஞ்ச் ரக வாகனங்கள் சந்தையில் ஹிட் அடித்துள்ளது. 40 லட்சம் புதிய வாகனங்கள் வரை இந்தாண்டு விற்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டாடாவின் டீசல் வாகனங்கள் விற்பனை 15 இல் இருந்து 12 விழுக்காடாக குறைந்துள்ளது. உலகமே கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனங்களுக்கு மாறி வருகிறது. இந்த சூழலில் டீசல் வாகனங்களுக்கு டிமாண்ட் இருக்கும் வரை அதனை தொடர்ந்து உற்பத்தி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார வாகனங்கள் விற்பனைக்கு மத்திய அரசு தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 90 %மின்சார கார்கள் இந்தியாவில் தனியார் கார்களாகவே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.