அரிசி ஏற்றுமதி தடையால் பாதிப்பு:ஐ.நா..
அரிசி ஏற்றுமதி தடையால் சமூக அமைதியற்ற சூழல் மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமமற்ற நிலையில் பெய்த பருவமழை மற்றும் கடும் வறட்சி காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா செய்தது. அதாவது இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு ஆணையிட்டது. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் சமூக அமைதியற்ற நிலை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்திருக்கிறது.உலகளவில் அரிசி ஏற்றுமதியில் 40விழுக்காடு பங்களிப்பை இந்தியா செய்து வந்தது. அரிசி ஏற்றுமதி தடை காரணமாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்களின் உணவு பாதுகாப்பு அற்ற நிலை உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. ஆப்ரிக்காவில் அரசியலில் அரிசியின் பங்கு முக்கியம் என்றும், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆப்ரிக்காவில் அபாயகரமான பாதிப்பு ஏற்படும் என்று சர்வதேச விவசாய மேம்பாட்டுத்துறை நிதியம் குறிப்பிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டும் இதேபோல் இந்தியாவும் வியட்நாமும் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் ஆப்ரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரபு நாடுகளில் இருந்து கோதுமை அளித்து உதவி செய்யப்பட்டது. ஆப்ரிக்காவில் அரிசி உணவை நம்பி ஏராளமான குடும்பத்தினர் இருக்கும் சூழலில் ,பலரும் உணவுப்பஞ்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.