சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை?
இந்தியாவில் புதிய கரும்பு அறுவடை பணிகள் வரும் 1ஆம் தேதி முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் 1ஆம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021-22காலகட்டத்தில் 11மில்லியன் டன் அளவு சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா செய்திருந்தது. பின்னர் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு 2022-23 காலகட்டத்தில் 6 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டது.கரும்பு விளைச்சல் இந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டில் விலை ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வழக்கத்தைவிட குறைவான மழைப்பொழிவு இருந்ததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கரும்பு உற்பத்தியில் இந்த இரண்டு மாநிலங்களின் பங்கு மட்டும் 50விழுக்காடாக இருக்கிறது. உலகளவில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் எத்தனாலை எரிபொருளுடன் கலக்க திட்டங்கள் தயாராகி வரும் நிலையில், மழையில்லாததால் கரும்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணிகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.2022-23 காலகட்டத்தில் மட்டும் 45 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு எத்தனால் எரிபொருளுடன் கலக்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதனை 2025ஆம் ஆண்டு 60லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
இந்தியாவில் பணவீக்கம் என்பது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக உயர்ந்திருந்த சூழலில் வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாத விலையை ஒப்பிடுகையில் இந்த மாதம் சர்க்கரை விலை இரண்டரை விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது.உலகம் முழுவதும் எல் நினோ விளைவு காரணமாக மாறுபட்ட மழைப்பொழிவு மற்றும் இந்தியாவில் சுமாரான மழைப்பொழிவால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த முறை சர்க்கரை விலையில் பெரிய மாறுதல்கள் இருந்து வருகிறது.