பங்காளிக்கு பணம்தர மறுக்கும் பகையாளி ..
சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் அண்டை நாடுகளாக இருந்தபோதிலும், அவர்களுக்குள் எப்போதும் ஒருவித நட்பு இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சீனா-பாகிஸ்தான் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கும்திட்டத்துக்கு சீனா எப்போதும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலவும் மோசமான சூழல் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பொருளாதார வழித்தடத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் பணத்தை சீனா தர தயங்கி வருகிறது. மேலும் பாகிஸ்தானில் பணியாற்றி வரும் சீன பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலும் இந்த திட்டத்தினை இன்னும் சீனா தாமதப்படுத்தி வருகிறது.
25 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா இந்த திட்டத்துக்காக இறக்கியுள்ளது. 2013ஆம் ஆண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாகிஸ்தானை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாற்றி, சீனாவில் இருந்து மற்ற 150 நாடுகளையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.சீனாவின் சின்ஜியான் என்ற நகரில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் உள்ள குவடார் துறைமுகம் வரை இந்த பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டு இந்த பொருளாதார வழித்தட பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த செலவாக 62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக செலவாகும் என்று கூறப்படுகிறது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்த வழித்தடம் செல்வதால் இந்தியா இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறது. முதலில் ஓ.கே. என்ற பாகிஸ்தான் திட்டம் தொடங்கி 10ஆண்டுகள் ஆன பிறகு இந்த வழித்தடத்துக்கு தயக்கம் காட்டி வருகிறது. மேலும் புதிய வழித்தடம் பெரிய மாற்றத்தை தங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தானியர்களுக்கு,ஏமாற்றமே மிஞ்சுவதாக அஞ்சுகின்றனர். பொருளாதாரவழித்தட கட்டுமானத்திற்கு சீனர்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், தங்கள் நாட்டு பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.குவடார் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலைகளில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாலும் சீனா இந்த திட்டத்துக்கு தயக்கம் காட்ட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.2017ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் ஏற்றுமதி பொருட்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. அதாவது வெறும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வணிகம் நடைபெற்று வருகிறதாம். கொரோனா காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே இருந்த இணக்கம் படிப்படியாக குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.