ஆபிசுக்கு வந்து சேருங்க..டிசிஎஸ் அதிரடி…
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அலுவலகத்துக்கு வந்து வாரத்துக்கு 5 நாட்கள வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்த நிறுவன பணியாளர்கள் ஆபிசுக்கு வரவேண்டாம் என்றும் வீட்டில் இருந்து பணியாற்றும்படியும் கோரப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக ஊழியர்கள் அலுவலகத்துக்கு திரும்பும் வகையில் திட்டம் தீட்டப்பட்டது. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகத்துக்கு சென்று பணியாற்றவும், மீதம் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் வகையிலும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த கலவையான பணி சூழலை டிசிஎஸ் நிறுவனம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. தேவைப்படும்போது மீண்டும் வீட்டில் இருந்து பணியாற்றும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 23 நிதியாண்டில் ஏற்கனவே பெண் பணியாளர்களின் வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அந்நிறுவன மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கார்ட் தெரிவித்துள்ளார். ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தில் 615318பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மார்ச் 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மட்டும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து பணியாற்றுவது வசதியாக இருந்தாலும் அதில் சில குறைபாடுகள் இருப்பதாக டிசிஎஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இளநிலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அலுவலக சூழல் எப்படி இருக்கும் என்பதே புரியாத நிலையில் அனைவரையும் வீட்டில் இருந்து பணியாற்ற வைப்பது சரியாக இருக்காது என்றும் டிசிஎஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் என்பவர் 2025ஆம் ஆண்டுக்குள் 25*25 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது 25% பணியாளர்கள் மட்டும் சுழற்சி அடிப்படையில் நிறுவனத்துக்கு வந்து பணியாற்றினால் போதும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ராஜேஷின் அறிவிப்புக்கு நேர் எதிராக அனைத்து பணியாளர்களும் தங்கள் அலுவலகங்களுக்கு வந்து சேர வேண்டும் என்று கூறியிருப்பது, வீட்டில் இருந்தே பணியாற்றிய டிசிஎஸ் ஊழியர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.