28,000 கோடி ரூபாய் கட்டுங்க என நோட்டீஸ்…
சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவுப்பிரிவின் மும்பை அலுவலகம் பிரபலமான டிரீம் 11 நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. அதாவது 28000 கோடி ரூபாய் பணத்தை டிரீம் 11 நிறுவனம் வரியாக செலுத்தவேண்டுமாம், இதேபோல் பிளே கேம்ஸ் 24*7 நிறுவனத்துக்கும் 21,000 கோடி ரூபாய்க்கான நோட்டீஸ் அளித்துள்ளனர். டிரீம் 11 நிறுவனத்திற்கு இந்த நோட்டீஸை ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில ஜிஎஸ்டி தணிக்கை அதிகாரிகளும் அளித்துள்ளனர். ஆனால் மத்திய,மாநில அரசுகள் மாற்றி மாற்றி விதிக்கும் வரி முறைகளால் பெரிய குழப்பத்தை சந்திப்பதாகவும் டிரீம் 11 நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2020 டிசம்பரில் தொடங்கி 2022 ஜனவரி வரையிலான தணிக்கைகளை செய்து கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜிஎஸ்டி அதிகாரிகள் மனுவாக தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைன் பேண்டசி விளையாட்டுப்போட்டிகள் குறித்து தெளிவில்லாமல் இருப்பதால் இந்த குழப்பங்கள் நேரிடுவதாக கூறப்படுகிறது. டிரீம் 11 நிறுவனம் இந்த சர்ச்சையில் அடிக்கடி சிக்கி வருகிறது.பலமுறை நினைவூட்டியும் உரிய பணத்தை செலுத்தாத காரணத்தால்தான் இந்த நோட்டீஸ் அளிக்கப்படுவதாகவும் டிரீம் 11 நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.