ஒரே நாளில் ரூ.680 அதிகரித்த தங்கம்..
உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் முதலில் பாதிக்கப்படுவதும்,பெரிய ஏற்ற இறக்கத்தை சந்திப்பதும் தங்கம் என்றால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்படித்தான் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதற்கு பிரதானமான காரணமாக பார்த்தால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர்தான் காரணம் என்கிறார்கள் நகை ஏற்றுமதியாளர்கள். ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 370 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 960ரூபாயாக விற்கப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி வரை 5285 ரூபாயாக சரிந்து கிடந்த தங்கம் ,சனிக்கிழமை ஒரே நாளில் இருமுறை விலை உயர்ந்தது. வெள்ளி விலையும் இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 2ஆயிரம் ரூபாய் அதிகரித்து 75ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகள் வெறும் பெயரளவுக்கானதுதான். இது மட்டுமின்றி செய்கூலி,சேதாரம் ஆகியவற்றையும் , 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியையும் சேர்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் சேர்த்தால்தான் ஒரு வாடிக்கையாளர் நகைக்கடைக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது தெரியவரும். இந்த சூழலில் கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.