பாதுகாப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய விதி…
டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யப்படும்போது தவறுதலாக,ஏராளமான பணம் மோசடி செய்யப்படுவதாக தினசரி பல புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடைபெற உதவியாக டோக்கன் முறை அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அனைத்து கிரிடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கும் டோக்கன் முறை என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அமலாக்க இருக்கிறது.
எளிமையாக சொல்லவேண்டுமெனில் டோக்கன் முறை என்பது என்னவென்றால், கார்டு விவரங்களை ஒவ்வொரு முறை தருவதற்கு பதிலாக ஒரு பிரத்யேக டோக்கன் உருவாக்கப்படும், அதில் கார்டு விவரங்களை பதியவேண்டிய அவசியம் இருக்காது. இந்த நுட்பம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனை பரவலாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளரின் கார்டு விவரங்களை சேமிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கும், வணிகர்களுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த டோக்கன் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?…. ஒருநபர் பொருள் வாங்க கடைக்காரரிடம் பணத்தை செலுத்த முற்படும்போது, கடைக்காரர் குறிப்பிட்ட தொகைக்கு ஒரு டோக்கனை உற்பத்தி செய்வார், அந்த டோக்கனுக்கு பணம் தரலாமா என வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியிடம் கோரப்படும்,ஆனால் கார்டு விவரங்களை தராமல் டோக்கன் எண்கள் மூலமாக விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே பணம் கடைக்காரருக்கு செல்லும், இதனால் தேவையில்லாமல் கார்டையும் பயன்படுத்தத்தேவையில்லை. பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதே இதன் எளிமையான விளக்கம். டோக்கன் முறை அமலாகும்பட்சத்தில் மொபைல் பேங்கிங்கில் பணம் அனுப்பிவைப்பதைப்போல எளிமையான முறையில் டோக்கன்களை மக்கள் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.