இங்கிரமண்ட் நஹி..கவலையில் ஊழியர்கள்…!!!
இந்தியாவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக அஸ்சென்சர் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் இலங்கையில் பணியாளர்களும், அலுவலகங்களும் இருக்கின்றன. இந்த நிறுவனத்தில் கணிசமான (3லட்சத்துக்கும் அதிகமான) பணியாளர்கள் உள்ள நிலையில், இந்தாண்டுக்கான ஊதிய உயர்வு, போனஸ் உயர்வு மற்றும் பதவி உயர்வு எதுவும் அளிக்கப்படவில்லையாம். உலகளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளால் ஐடி நிறுவனங்கள் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில்,அக்சென்சர் நிறுவனத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அக்சென்சர் நிறுவனம் சுமார் 19,000 பேரை பணிநீக்கம் செய்திருந்தது. கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கலவையான காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததைவிடவும் மோசமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாக அந்நிறுவன தலைமை தெரிவித்துள்ளது. மொத்தமாக அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்காமல், மிகச்சிறப்பாக யார் பணியாற்றினார்களோ அவர்களுக்கு மட்டும் போனஸ் அளிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்தாண்டைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்சன்சர் நிறுவனத்தில் மொத்தம் 13நிலைகளில் பணியாளர்கள் இருக்கின்றனர். இதில் 1 முதல் 4 ஆம் நிலை வரை உள்ள ஊழியர்களுக்கு ஜுன் 2024 வரை ஊதிய உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலை 5-ல் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐடி நிறுவனங்களில் பிரபலமான எச்சிஎல் நிறுவனம் தனது மூத்த தலைமை பதவிகளில் இருப்போருக்கு ஊதிய உயர்வு இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், ஜூனியர் அளவில் இருப்போருக்கு ஊதிய உயர்வு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை செப்டம்பருக்கு பதிலாக டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது அக்சன்சர் நிறுவனமும் தனது பணியாளர்களுக்கு சலுகைகளை நிறுத்தியுள்ளது தகவல் தொழில்நுட்ப வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.