H1 b விசாவுக்கு கட்டுப்பாடுகள்…
வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய H1Bவிசா வழங்கப்படுகிறது. இந்த விசா நடைமுறையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.போலி விசாக்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவோருக்கு உகந்த வகையில் புதிய திட்டம் அமலாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு வரை தோராயமாக 5லட்சத்து 80ஆயிரம் இந்த வகை விசாக்கள் வழங்கப்பட்டன.இதில் பெரும்பாலும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய விதிகள் அமெரிக்க பணியாளர்கள் மற்றும் தற்போது விசா வைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை பதிவு செய்திருந்தாலும் தேர்ச்சி முறைக்கு ஒரு முறையாவது உட்படவேண்டுமாம். இப்போது வரை எத்தனை முறை பதிகிறோமோ அத்தனை அதிக வாய்ப்புகள்வழங்கப்பட்டு வந்தன. ஒரே நபர் பலமுறை பதிவு செய்வதால் சிக்கல் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
H1B விசாவை தவறாக பயன்படுத்தும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும்,இடைத்தரகர்கள் இதனால் பலனடைவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய விதியின் மூலம் பலமுறை பதிவு செய்வது தவிர்க்கப்பட இருக்கிறது.இதுகுறித்து கருத்துகளை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. புது கட்டுப்பாடுகள் அமலாக பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. சிறப்பு பணிப்பிரிவு என்ற அடிப்படையில் H1Bவிசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது விரைவில் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. அமெரிக்காவில் தொழில் முனைவோராக விரும்பவோரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த புதிய விதிகள் மாற்றப்பட இருக்கின்றன. மாணவர்களுக்கும் இந்த புதிய முறையால் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. F1 விசாவில் படிக்க வந்த மாணவர்கள் அப்படியே H1Bவிசாவுக்கு விண்ணப்பிக்கும் சூழல் மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களாக இருந்து பின்னர் பணியாளர்களாக மாற விரும்பவோரின் அவகாசத்தை குறைக்க புதிய முறை கொண்டுவரப்பட இருக்கிறதாம். புதிய முறை அமலாக இருப்பதால் மாணவர்களுக்கு காத்திருப்பு காலம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட ஸ்டெம் வகை படிப்பு படிப்போருக்கு காத்திருப்பு காலம் 2 ஆண்டுகள் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களை பாதிக்கும் வகையிலான இந்த மாற்றத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.