பிளாஸ்டிக் கேரி பேகுக்கு காசு கேட்பதா?
ஒரு கேரி பேகுக்கு 7 ரூபாய் வசூலித்த ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்தில் எப்போதும் வாடிக்கையாளர்களிடம் கேரி பேக் பணம் கொடுத்துவாங்கும்படி நிர்பந்திப்பது இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதே பாணியில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பர்னிச்சர் கடை 20 ரூபாய் கொடுத்து ஒரு கேரி பேக் வாங்கச் சொன்னதற்கு நுகர்வோர் நீதிமன்றம் 3,000ரூபாய் அபராதம் விதித்து இருந்தது. பொருளுக்கு காசு தரும்போது பிளாஸ்டிக் கேரி பேகுக்கு தனியாக பணம் தருவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நிறுவனத்தின் லோகோ அச்சிடப்பட்ட பைகள்,பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றிற்கு பணம் வசூலிப்பது சட்டவிரோதம் என்று கூறும் சட்ட நிபுணர்கள், வாடிக்கையாளர்களை விளம்பர ஏஜெண்டுகள் போல நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தச்சட்டம் 2018 -ன் உட்பிரிவு 15, பிளாஸ்டிக் கேரி பேக்களுக்கு நிறுவனங்கள் பணம் வாங்கக் கூடாது என்று தெரிவிக்கிறது. அப்படி பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க வேண்டுமானால் எதுவும் அச்சிடப்படாத பைகளை அளித்து அதற்கு வேண்டுமானால் பணம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் விதி உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை பள்ளிகளில் இருந்தே ஏற்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு முதல்தான் பிளாஸ்டிக் பைகளுக்கு பணம் வசூலிக்கும் நடைமுறை இருந்தது. இதற்கும் அப்போதைய மத்திய அரசே காரணம்,அதாவது கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கேரி பேக் அளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்ததால் அப்போது முதல் சில கடைகள் தங்கள் நிறுவன பெயர்களை அச்சிட்ட கவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து வருகின்றனர்.
சிறிய பிளாஸ்டிக் பேக் கேசாக இருந்தாலும் அதற்கு தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் ஆவதாகவும் நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அபராதங்களை கடுமையாக்கினால் நிறுவனங்கள் இந்த தவறை சரி செய்துகொள்ளும் என்றும் நிபுணர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.