முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் லாபம்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளான நவம்பர் 6ஆம் தேதி,இந்திய சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கிகளில் கடன்கள் மீதான வட்டி குறைப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் வலுவான வகையில் மத்திய வங்கிகள் உள்ளன.இதன் விளைவாக உலகளாவிய சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க பத்திரங்கள் மீதான முதலீடுகள் சரிந்ததும் சிறிய ஆறுதல்களை அளித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு பத்திரங்கள் மீதான முதலீடு முதல்முறையாக குறைந்திருக்கிறது. 19,345.85 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி 19,411.75புள்ளிகளில் நிறைவுற்றது. 64,835.23புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 64,958.69 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.இது 595 புள்ளிகள் உயர்வாகும். பாரத ஸ்டேட் வங்கி,டைட்டன்,இந்துஸ்தான் யூனிலிவர்,டாடா மோட்டர்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே சரிவில் முடிந்தன. சந்தையின் மொத்த மூலதனம் 315.2 லட்சம் கோடியில் இருந்து 318.2லட்சம் கோடிரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது. DLF, ONGC, Power Grid, Shriram Finance,Zomato உள்ளிட்ட 250க்கும் அதிகமான பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. Divi’s Laboratories, Eicher Motors, Hero MotoCorp, Axis Bank, Larsen & Toubro ஆகிய நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த லாபத்தை பதிவு செய்தன.
நிஃப்டி உலோகத்துறை பங்குகள் ஏற்றம் கண்டன. சுகாதாரத்துறை,எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்துத்துறை, ரியல் எஸ்டேட் துறைகள் லாபத்தை பதிவு செய்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 700ரூபாயாக குறைந்திருக்கிறது. இது சனிக்கிழமை விலையைவிட கிராமுக்கு 15 ரூபாய் குறைவாகும்.ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 600ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம்வெள்ளி 78 ரூபாய் 20 காசுகளாக இருக்கிறது.கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 200 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி கண்டிப்பாக சேர்க்க வேண்டும், இது மட்டுமின்றி செய்கூலி,சேதாரமும் தனியாக சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் மாறுபடும் என்பதை நினைவில் கொண்டு நகைகளை வாங்க வேண்டும்.