ஐ.டியில் கொட்டிய பணமழை நிற்கும் தருணமா இது?
தகவல் தொழில்நுட்பத்துறையில் லட்சங்களில் சம்பளம் பெற்று வந்த பழைய டெக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வோ, புதிதாக வேலைக்கு எடுப்போருக்கு பல லட்சங்களில் மாத சம்பளமாக அளிக்கும் நிலையோ தற்போது பாதியாக குறைந்திருக்கிறது என்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள். உலகளவில் ஐடி துறையில் தேவை குறைந்திருக்கிறது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் புதிதாக ஆட்களை எடுக்கும் அளவு பாதியாக சரிந்துள்ளது. சாஃப்ட்வேர் துறையில் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது சராசரியாக 18 முதல் 22%வரை சம்பளம் அளிக்கப்படுகிறது.கோடிங் தெரிந்த நபர்களைவிட செயற்கை நுண்ணறிவு நுட்பம் எளிதாக பணிகளை செய்வதால் அந்த நுட்பம் தெரிந்தவர்களுக்கு அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது. டேட்டா சயின்டிஸ்ட்,ஃபுல் ஸ்டேக் டெவலப்பர்,டேட்டா இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளுக்கு வருங்காலம் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த துறைகளில் 100 முதல் 120%வரை சம்பள உயர்வு கேட்ட இடத்தில் அவர்களுக்கும் தற்போது 40%வரை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிசிஎஸ்,இன்போசிஸ்,எச்சிஎல் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் மட்டும் தங்களிடம் சரியாக பணியாற்றாத பணியாளர்கள் 21,000 பேரை நீக்கியுள்ளது. 4 முதல் 7 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொறியாளர்களின் சராசரி சம்பளம் 10 முதல் 26 லட்சம் ரூபாயாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த 2021-22நிதியாண்டில் இந்த அளவு,15-35 லட்சமாக இருந்தது.
அதிக சம்பளம் கேட்போரை நிராகரிக்கும் பணியில் மனிதவள அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஒரு நிறுவனத்திற்குள்ளேயே இருந்துகொண்டு சம்பள உயர்வு கேட்போருக்கு அதிகபட்சம் 22%க்கும் அதிகமாக சம்பளத்தை தர முடியாது என்று நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. புதிய ஆட்களுக்கு செலவு செய்யும் பணத்தை செயற்கை நுண்ணறிவு,இணைய பாதுகாப்பு,உள்ளிட்ட துறைகளுக்கு செலவு செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. புதிதாக ஆட்களை எடுப்பதற்கு பதிலாக சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களுக்கு திறமைகள் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.