ஒரு டோஸ் மருந்து 17 கோடியா ?அப்படி என்ன இருக்கு அதில்..?
தண்டுவட தசை நோயான SMAஎன்ற நோய் 2 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு சரி செய்யப்பட்டால் குழந்தைகள் உயிர் பிழைத்துவிடுவார்கள். அப்படி உயிர் பிழைக்க Zolgensmaஎன்ற மருந்து செலுத்த வேண்டும். பிரச்னை என்னவென்றால் குப்பனோ,சுப்பனோ அந்த மருந்தை வாங்க முடியாது. ஒரு குப்பி மருந்தின் விலை 17 கோடி ரூபாயாகும்.இந்த மருந்து இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை.என்றாலும் இந்த மருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அண்மையில் 15 மாத குழந்தையின் சிகிச்சைக்காக பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்து மருந்துக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். அந்த மருந்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. Novartis என்ற ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவில் மட்டும் SMAவகை நோயால் 10,000 முதல் 25,000குழந்தைகள் அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Zolgensmaமருந்து,மோட்டார் நியூரான்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.இது தசையின் செயல்பாட்டை அதிகரித்து குழந்தைகளை இயல்புநிலைக்கு மீட்கிறது.SMN protein என்ற வேதிப்பொருள் இந்த 17 கோடி ரூபாய் மருந்தில் இருக்கிறது. குறிப்பிட்ட இந்த மருந்துக்கு இத்தனை செலவு செய்ய காரணம் மரபணு மாற்றத்தை இந்த மருந்து ஏற்படுத்துகிறது. இதற்கான ஆராய்ச்சிக்குத்தான் அவ்வளவு செலவாகிறது என்கிறார்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர்கள். மரபணு மருந்தை தயாரிக்கும் நிறுவன தரவுகளின்படி 45 நாடுகளில் மட்டுமே இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2500 நோயாளிகளுக்கு இந்த மருந்து செலுத்தப்படுகிறது. 36 நாடுகளில் உள்ள 300குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனம் இலவசமாகவே இந்த மருந்தை தந்து சேவையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.