வாரத்துக்கு 3 நாள் ஆபிஸ் வரலன்னா அது கிடைக்காதாம்..என்ன தெரியுமா?
கொரோனா காலகட்டத்தில் ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்து வேலைசெய்யும் ஒர்க் ஃபிரம் ஹோம் வசதி தரப்பட்டது. இதனை படிப்படியாக டெக் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை அலுவலகத்துக்கு அழைத்துவிட்டன. இந்த நிலையில் முன்னணி மின் வணிக நிறுவனமான அமேசான் தனது பணியாளர்களுக்கு நூதன நிபந்தனை விதித்துள்ளது. யாரெல்லாம் வாரத்துக்கு 3 நாட்கள் அலுவலகம் வரவில்லையோ அவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடையாதாம். விதிகளை பின்பற்றாத பணியாளர்கள் பிராந்திய துணைத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகுதான் சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு பெறுவார்கள் என்று அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எச்சரித்துள்ளது. இந்தாண்டு பிப்ரவரியில் இருந்து அமேசான் ஊழியர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சில பணியாளர்கள் இதனை இன்னும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களை மீண்டும் அலுவலகம் வரவைக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய திட்டத்தை அமேசான் செயல்படுத்தியிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு இடைவேளை நேரத்தில் அமேசான் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வந்தே ஆகவேண்டும் என்று கடந்த ஆகஸ்ட்டில் அமேசான் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜாசி கூறியிருந்தார். இதற்கு உடன்பட மறுப்பவர்கள் நிறுவனத்தில் நீடிக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.