ஆண்டுக்கு 83 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை..!
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை சாத்தியப்படுத்திய ஓபன் ஏஐ என்ற நிறுவனம்தான் சாட் ஜிபிடி என்ற நுட்பத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் தனது வணிக போட்டியாளரான மெட்டா மற்றும் கூகுள் நிறுவனத்தில் இருந்து முன்னணி டெக் நிபுணர்களை தன்பக்கம் ஈர்க்க முயற்சித்து வருகிறது. தற்போது கூகுள் நிறுவனத்தில் தரப்படும் சம்பளத்தைவிட அதிகபட்ச சம்பளமாக 83 கோடி ரூபாய் ஆண்டு சம்பளமாக கொட்டிக்கொடுக்கவும் சாட்ஜிபிடி நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கனவே கூகுள் மற்றும் மெட்டாவில் பணியாற்றிய 93 பேரை ஓபன் ஏ.ஐ நிறுவனம் வளைத்துப்போட்டுள்ளது.
இதில் கூகுளில் பணியாற்றிய 54 பேரும்,மெட்டாவில் பணியாற்றிய 34 மூத்த நிர்வாகிகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
அப்படி இவர்கள் என்னதான் வேலை செய்யவேண்டும் என்று பார்த்தால் ஆய்வு செய்வதுதான் வேலையாம்.
பொதுவாக ஆய்வு செய்யும் ரிசர்ச் இன்ஜினியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமே ஆண்டுக்கு 2 முதல் 3.8 கோடி ரூபாயாக இருக்கிறது. சம்பளத்துடன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் வகையிலான வசதிகளையும் சேர்த்தால் ஓபன் ஏ.ஐ தரும் சம்பளம் ஆண்டுக்கு 83 கோடி ரூபாயாக இருக்கிறது. தரவு விஞ்ஞானிகள்,ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை ஓபன் ஏஐ பணிக்கு எடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பாக மாற்றவும், மிஷின் லர்னிங் மற்றும், நன்கு கோடிங் தெரிந்த நபரை வலைவீசி அந்த நிறுவனம் தேடி வருகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில் மெத்தப்படித்தவர்கள் எல்லாம் கிடையாது, ஏன் சிலர் கல்லூரியில் இருந்து பாதியில் நின்றவர்களும் இருக்கின்றனர். திறமைக்குத்தான் மரியாதையும் சம்பளமும் தவிர படிப்பு இந்த நிறுவனத்தில் இரண்டாம்பட்சம்தான்.