3,000 பேருக்கு புதிதாக வேலை..
கால் வைக்கும் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறக்கும் டாடா நிறுவனத்தின் ஒரு பகுதிதான் டைட்டன். இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் பணியாளர்களை புதிதாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் வணிகம் நடக்கும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது. பொறியியல், வடிவமைப்பு, டிஜிட்டல் மற்றும் தகவல் ஆய்வு, விற்பனை உள்ளிட்ட துறைகளில் இந்த 3 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். பல துறைகளிலும் ஜாம்பவான்களாக இருக்கும் பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்த்து வளர்ச்சியை தீவிரப்படுத்தப்போவதாக டைட்டன் நிறுவன மனிதவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் 15 முதல் 18%வரை புதிய பணியாளர்கள் சேர்ந்துகொண்டே இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை அந்நிறுவன பணியாளர்களில் 60%பேர் மெட்ரோ நகரங்களிலும், 40%பணியாளர்கள் 2 மற்றும் 3 ஆம் தர நகரங்களிலும் இருந்து பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. பிராந்திய அளவிலான பணியாளர்களுக்கு பணிவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்காக இருப்பதாக மனிதவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த 2-3ஆண்டுகளில் பொறியியல் துறை சார்ந்த பணிகளில் மட்டும் 50%பேர் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை 10%அதிகரிக்க டைட்டன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டைட்டன் நிறுவனம் என்பது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாட்டின் டிட்கோ அமைப்புடன் இணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.