புது ரூட் எடுக்கும் பழைய கார் விற்பனை!!
இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை விற்கும் நிறுவனங்கள் புற்றீசல் போல நிறைய தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இழப்பை சமாளிக்க சில நிறுவனங்கள் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளன. பழைய கார்களுக்கு நிதி அளிப்பது, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் இந்த நிறுவனங்கள் தங்கள் கவனத்தை திசை திருப்பி இருக்கின்றனர். செலவுகளை கட்டுப்படுத்த இந்த சிக்கின நடவடிக்கைகளை எடுப்பதாக சில நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தனது வழக்கமான விற்பனையை விரிவாக்கம் செய்வதை விட்டுவிட்டு கார்ஸ் 24 நிறுவனம் மதிப்பு கூட்டு சேவைகளை கையில் எடுத்திருக்கிறது. கார் சர்வீஸ் துறையையும் அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. பழைய கார்களை அழிக்கும் புதிய பணிகளையும் கார்ஸ் 24 நிறுவனம் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஸ்பின்னி நிறுவனம் தனது பணியாளர்கள் 300 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது. கார் தேக்கோ நிறுவனமும் படிப்படியாக தனது வணிகத்தை குறைத்து வருகிறது. காப்பீட்டு பிரிவு தங்களுக்கு கைகொடுப்பதாக கார் தேக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய கார் விற்பனையில் 100 கார்கள் விற்கும் இடத்தில் 80 கார்கள் லாபம் தரும்,ஆனால் 20 கார்கள் நஷ்டத்தை தருகின்றன. ஆனால் இந்த 20 கார்கள் நஷ்டம் என்பது 80 கார்களின் லாபத்தை சாப்பிட்டுவிடுவதாக வணிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். புதிய கார்களுக்கு நிகராக பழைய கார்களின் விற்பனையும் நடைபெறுவதாக கூறும் தனியார் நிறுவனங்கள், லாபத்தை குறிவைப்பதாகவும், தற்போது லாபத்தின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கார்ஸ் 24 நிறுவனத்தின் நஷ்டம் 1093 கோடியில் இருந்து 2023 நிதியாண்டில் 467 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. ஸ்பின்னி நிறுவன வருவாய் 109 கோடியில் இருந்து 3262 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
கார் தேக்கோ நிறுவனத்தின் வருவாயும் 1600கோடியில் இருந்து 2331 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் இழப்பு மட்டும் 535 கோடி ரூபாயில் இருந்து 562 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.