ஐபோனுக்காக மேலும் ஒரு ஆலையை அமைக்கிறது டாடா?
கால்வைக்கும் இடமெல்லாம் கொடிகட்டி பறக்கும் டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் ஆலையை கட்டி வருகிறது. இந்த புதிய ஆலை தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் அமைய இருக்கிறது. இந்த புதிய ஆலையில் இருபது அசம்பிளி லைன்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பணியாளர்கள் இந்த ஆலையில் பணியாற்ற இருக்கின்றனர். ஏற்கனவே பிரபல விஸ்ட்ரான் நிறுவனத்திடம் இருந்து டாடா குழுமம் ஆலையை வாங்கிவிட்டது. விஸ்ட்ரானின் ஆலை கர்நாடகத்தில் வாங்கப்பட்டிருக்கும் நிலையில், ஓசூரில் புதிய ஆலை அமைகிறது. சீனாவை மட்டும் நம்பியில்லாமல் ஐபோன் உற்பத்தியை இந்தியா, தாய்லாந்து,மலேசியா ஆகிய இடங்களுக்கும் பிரித்து அனுப்பியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
உப்பு முதல் சாப்ட்வேர் வரை அனைத்து பொருட்களையும் விற்கும் டாடா, தனது ஓசூர் ஆலையில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலையிலேயே உலோக கேசிங்குகளையும் டாடா தயாரிக்க இருக்கிறது. இந்தியாவில் 100 பிரத்யேக ஸ்டோர்களை டாடா திறக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக இரண்டு இடங்களில் தங்கள் நேரடி விற்பனையகத்தை திறந்திருக்கிறது.
உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை பெற ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனம் மற்றும் பெகட்ரான் நிறுவனம் ஆப்பிள் போன்களின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர். இப்போது வரை இந்தியாவில் வெறும் ஏழு விழுக்காடு அளவுக்குத்தான் ஐபோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
மீதமுள்ளவை சீனாவில் இருந்து மட்டுமே உலகின்பல நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஓசூரில் அமைய இருக்கும் நடுத்தர ஆலை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஸ்ட்ரான் நிறுவனத்திடம் இருந்து டாடா குழுமம் வாங்கிய ஆலையை விட ஓசூர் ஆலை பெரிதாக இருக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனமும் டாடா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் போன்களுக்கு,ஓசூரில் உள்ள ஆலைக்கு என அரசு சார்பில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. புதிய ஆலையில் விரைவில் உற்பத்தியும் தொடங்கப்பட இருக்கிறது.