சர்க்கரை ஆலைக்கு ஏன் குறிவைக்கிறார் அம்பானி?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியா முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளை குறிவைத்து காய்நகர்த்தி வருகிறார். ஏன் அவர் திடீரென இந்த துறையில் ஆர்வம் காட்டுகிறார் என்று விசாரித்தோம். அப்போது கிடைத்தது ஒரு தகவல்.
சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்படும் கரும்பு சக்கை மற்றும் கழிவுகள் உயிரி எரிபொருள்பயன்படுத்த உதவுகிறதாம். பசுமை ஆற்றல் பக்கம் அரசு மற்றும் தனியாரின் கவனம் திரும்பியுள்ள நிலையில் முகேஷ் அம்பானியின் யோசனை பலதரப்பினரையும் ரசிக்க வைத்திருக்கிறது. 100 உயிரி எரிபொருள் ஆலைகளை அடுத்த 5 ஆண்டுகளில் திறக்க இருப்பதாக கடந்த செப்டம்பரில் முகேஷ் அம்பானி கூறியிருந்தார். இதற்காக ஜியோவும் பிரிட்டனைச் சேர்ந்த BP நிறுவனமும் இணைந்து ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இந்த திட்டத்தில் புனேவைச் சேர்ந்த எவர் என்விரோ நிறுவனமும் கைகோர்த்தது. அடுத்த சில ஆண்டுகளில் என்விரோ நிறுவனம் மட்டும் இந்த துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. மாற்று எரிபொருள் துறையில் கச்சா எண்ணெய் நிறுவனங்களும் களமிறங்கியிருக்கின்றன. இந்தஎரிபொருள்கள் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயோகேஸ் இந்தியாவுக்கு ஏன் தேவை என்ற கேள்வி எழலாம்.
இந்தியாவில் உள்நாட்டு இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளது. 5 விழுக்காடு பயோகேசையும் இயற்கை எரிவாயுவுடன் கலக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த துறையில் மட்டும் 1.17 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்திலேயே இயற்கையாக கிடைக்கும் அழுத்தப்பட்ட எரிவாயுவுடன் 1 விழுக்காடு உயிரி கேஸ் கலக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இருக்கிறதாம். 2025 ஆம் ஆண்டுக்குள் 1 விழுக்காடும், 2028-29 காலகட்டத்தில் 5% எரிபொருளும் கலக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி இயற்கை எரிவாயுஉடன் உயிரி எரிவாயுவை கலப்பதால் பொருளாதாரத்திலும் பெரிய நன்மை கிடைக்கும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5 விழுக்காடு உயிரி எரிவாயுவை கலந்தால் கரியமில வாயு வெளியேற்றம் 2 விழுக்காடு வரை குறையும் என்கிறார்கள் நிபுணர்கள். குளிர்காலங்களில் வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயக் கழிவுகளையும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.