தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
டிசம்பர் 9 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்திருக்கிறது.
ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் குறைந்து 5765 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் அளவுக்கு 23 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாகத்தான் இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இது மட்டுமின்றி வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய்க்கும், கட்டி வெள்ளிவிலை கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 ஆம் தேதி வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாக 47ஆயிரத்து 800 ரூபாயாக இருந்த தங்கம் விலை படிப்படியாக சரிந்து தற்போது 46ஆயிரத்து 120 ரூபாயாக விற்பனையாகிறது. இதுதான் தங்கத்தை வாங்க சரியான தருணமா என்ற கேள்வி நடுத்தர மக்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. சற்று குறைந்தாலும் வாங்கிப்போடுங்கள் என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள், ஏனெனில் இந்தாண்டு முடிவதற்குள்ளாகவே தங்கம் விலை ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாயை கடக்கும் என்பதே அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை சேர்த்தால்தான்,கையில் இருந்து எவ்வளவு பணம் கடைக்கு வாடிக்கையாளர்கள் தரவேண்டும் என்பது தெரியவரும். இதில் ஜிஎஸ்டி என்பது நிலையானது. 3 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. ஆனால் செய்கூலி, சேதாரம் என்பது ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு விலை வைத்து விற்கப்படும். இதில் குறைவான செய்கூலி, சேதாரம் உள்ள கடைகளில் நகைகளை தரமாக வாங்குவதே சாமர்த்தியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தங்கம் வாங்குவது நல்லது என்றாலும் செய்கூலி,சேதாரம் , பாதுகாப்பு அம்சங்களை எண்ணிப்பார்க்கும்போது தங்கப்பத்திரங்கள் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது. அதையும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்.