இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ…
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ என்ற பெயரை விப்ரோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான THIERRY delporte பெற்றுள்ளார். இவருக்கு ஆண்டு சம்பளமாக 82 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. எச்சிஎல் மற்றும் டிசிஎஸ் நிறுவன சிஇஓகளைவிட அதிகபட்சமாக தியெர்ரி சம்பளம் வாங்குகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தியெர்ரி பணியில் சேர்ந்துள்ளார். 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள் கொண்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அவர் பணியாற்றி வருகிறார். அசீம் பிரேம்ஜியை சந்தித்தது குறித்து தியெர்ரி மகிழ்ச்சி தெரிவித்தார். அசீம் பிரேம்ஜி மற்றும் அவரின் மகன் ரிஷத் பிரேம்ஜியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி தருவதாக அப்போதே ஃபோர்ப்ஸ் நிறுவனத்துக்கு தியெ்ர்ரி பேட்டி அளித்திருந்தார். அதிகம் சம்பாதிக்கும் சிஇஓ பட்டியலில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலில் பாரெக் இரண்டாம் இடம்பிடித்திருக்கிறார். மும்பை பங்குச்சந்தை தரவுகளின்படி சலிலின் சம்பளம் 56.45 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குர்னானி இருக்கிறார். இவருக்கு சம்பளமாக 30 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. இதேபோல் 4 ஆவது இடத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் இருக்கிறார். இவருக்கு சம்பளமாக 29 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. இது கடந்தாண்டை விட 13 விழுக்காடு ராஜேஷுக்கு கூடுதலாக அளிக்கப்படும் தொகையாகும்.
இதேபோல் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் ஸ்டார்ட் அப் நிறுவன இயக்குநர் என்ற பட்டியலில் ஜீரோதா நிறுவனத்தின் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் திகழ்கின்றனர். இவர்களுக்கு ஆண்டு சம்பளமாக 72 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.