ரயில்வேவின் லட்சம் கோடி ரூபாய் திட்டம் தெரியுமா??
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்திய ரயில்வே திகழும் நிலையில், இந்திய ரயில்வேவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயணிகள் ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளதால் ,இந்த திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 2024 நிதியாண்டில் ரயில்வே மூலதனமாக 2.4லட்சம் கோடி ரூபாய்,அதாவது 70%பட்ஜெட் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 15 ஆண்டுகளில் பழைய ரயில்கள் படிப்படியாக மாற்றப்பட இருக்கின்றன. இந்திய ரயில்வேவை மேம்படுத்த 2030ஆம் ஆண்டு வரை 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மூலதன முதலீடுகளில் ரயில்வே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும்,ரயில்வேயில் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்வே நிலையங்களை தரம் உயர்த்தவும் பணிகள் நடப்பதாக கூறியுள்ளார். மேற்கத்திய சரக்கு வழித்தடத்தில் உள்ள 1337 கிலோமீட்டர் தூரத்தை சீரமைக்கும் பணிகள் 80 விழுக்காடு முடிந்துவிடட்தாகவும், இதன் மூலம் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்சேவை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் 10,754 ரயில்கள் தினசரி இயக்கப்படுவதாகவும்,இதில் கூடுதலாக 3 ஆயிரம் ரயில்களை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் ரயில் பயணிகள் வெயிட்டிங் லிஸ்ட் பூஜ்ஜியமாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட ஏற்கனவே 568 ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர். இதன் மூலம் கூடுதலாக ஆண்டுதோறும் 700 கோடி பயணிகள் ஓராண்டில் பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இது வரும் 2030ஆம் ஆண்டு கூடுதலாக ஆயிரம் கோடியாக உயரும் என்றும் அவர் கணித்திருக்கிறார். இந்தியாவில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் துரிதமாக செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள அமைச்சர், நடப்பு நிதியாண்டில் 5500 முதல் 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 16 கிலோமீட்டர் தண்டவாளம் அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022-23 நிதியாண்டில் 5243 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டன. அதாவது ஒரு நாளில் சராசரியாக 14 கிலோமீட்டர் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக மத்திய அமைச்சர் புள்ளி விவரங்களை அள்ளி வீசியிருக்கிறார்.