5 டிரில்லியன் பொருளாதாரம் கிட்டத்தட்ட சாத்தியமில்லங்க..”
2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி முதல் பாதியில் உயர்ந்திருப்பது குறித்து ரகுராம் ராஜன் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளதாக கூறினாலும், தனியார் முதலீடுகள், தனியார் நுகர்வு வேகமெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். உலகளவில் சாதகமான சூழல் நிலவி வருவதன் எதிரொலியாகவே இந்தியாவிலும் நல்ல நிலை தொடர்கிறது. உள்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயர முக்கிய காரணம் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டும்தான் 2025-ல் 5 டிரில்லியன் பொருளாதாரம் எட்டப்படும் என்று ரகுராம் ராஜன் கூறினார். தற்போது வரை இந்திய பொருளாதாரம் 3.5 டிரில்லியன் டாலராக இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 12 முதல் 15 விழுக்காடாக இருக்க வேண்டுமாம். தற்போதுள்ள 6விழுக்காடுக்கு அதிகமான பொருளாதாரத்தை 12 முதல் 15 விழுக்காடாக உயர்த்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கடந்த காலங்களில் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், ஆட்டோமொபைல், ஸ்டீல் உள்ளிட்ட 14 துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.