முன்னாள் பைலட்டின் மனு தள்ளுபடி..!!!
ஏர் இந்தியா நிறுவனத்தையும் விஸ்தாரா நிறுவனத்தையும் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் முன்னாள் விமானி இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் முகாந்திரமோ, ஆதாரங்களோ இல்லை என்று அறிவித்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனத்தில் டாடாவின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. கடந்தாண்டு ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியிருந்தது.
ஏர்இந்தியாவையும் விஸ்தாராவையும் இணைக்கக் கூடாது என்று மனுதாரர் கூறியிருந்தார். அவ்வாறு இணைத்தால் தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஏர் இந்தியா நிறுவனம் தனது ஆதிக்கத்தை செலுத்தி பணிகளை செய்து வருவதாக மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியை இந்த இணைப்பு பாதிக்கும் என்றும் வழக்கில் கூறியிருந்தார். எந்த வித ஆதாரமும் சமர்ப்பிக்காமல் எப்படி புகார் அளித்தீர்கள் என்று வழக்கு தொடர்ந்த முன்னாள் விமானியை போட்டி ஆணையம் கடிந்துகொண்டது. விதிகளுக்கு வெளியேதான் நிறுவனத்துக்கும் பைலட்டுக்கும் தகராறு இருப்பதாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனவே விதிமீறல் இருக்கிறதா என்ற புகாருக்கே இடம் கிடைக்கவில்லை என்றும் ஆணையம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏர் இந்தியாவும் விஸ்தாவும் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் சிசிஐ எனப்படும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.