35 பில்லியன் டாலர் இழந்த அதானி…
வருடமும் முடியப்போகிறது.சிலருக்கு இந்தாண்டு நல்லதாக இருந்திருக்கும், சிலருக்கு மோசமானதாக அமைந்திருக்கும். இதில் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு, இந்தாண்டு இரண்டாம் வகையாக அமைந்திருக்கிறது. ஆமாங்க, இந்தாண்டு மட்டும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்திருக்கிறது. பள்ளிக்கூடம் கூட முழுவதும் முடிக்காமல் தற்போது உலகளவில் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் கவுதம் அதானி. 61 வயதாகும் கவுதம் அதானிமீது அமெரிக்க பிரபல நிறுவனமான ஹிண்டன்பர்க் ஜனவரி 24 ஆம் தேதி மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை கவுதம் அதானி மற்றும் அவரின் நிறுவனங்கள் மீது சுமத்தியது. வரி ஏய்ப்பு, தவறான பங்குச்சந்தை மதிப்பு கணக்கீடு என்று 106 பக்க குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் சுமத்தி இருந்தது. இந்த நிலையில் துவக்கம் முதலே கவுதம் அதானி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கவுதம் அதானியின் சொத்துமதிப்பு கணிசமாக வீழ்ந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பு அசுர வேகத்தில் வளர்ந்து வந்த கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் மிகக்குறுகிய காலத்தில் அடுத்தடுத்த இடங்கள் முன்னேறி 2 ஆவது இடத்தை எட்டிப்பிடித்தார். குற்றச்சாட்டுக்கு முன்பு கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் பின்னாளில் அது 14 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. மார்ச் மாதம் வரை மிகப்பெரிய சரிவுகளை சந்தித்து வந்த கவுதம் அதானிக்கு கைகொடுத்து தேற்றத் தொடங்கியது GQGஎன்ற நிறுவனம்தான். இதுவும் அமெரிக்க நிறுவனம்தான்.
இதற்கிடையில் கவுதம் அதானி தவறு செய்தாரா இல்லையா என்று செபி ஒரு பக்கம் விசாரிக்கிறது. உச்சநீதிமன்றம் ஒரு பக்கம் நிபுணர்கள் குழுவை அமைத்து விசாரித்தது. எதிலும் வலுவான ஆதாரங்கள் சிக்கியபாடில்லை. ஆனால் முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி அறிக்கை தரப்படவேண்டியிருக்கிறது. இந்த காரணிகளால் கவுதம் அதானியின் செல்வாக்கு மீண்டும் உயரத் தொடங்கியது. எனினும் இந்த ஓராண்டில் மட்டும் தன்வசம் இருந்த பணத்தில் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை கவுதம் அதானி இழந்திருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி அடைந்ததும், கவுதம் அதானியின் சொத்துமதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தொழில் முதலீடுகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே சொத்துகளை அதிகளவில் இழந்திருந்தாலும், மீண்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் ஒரு காலத்தில் மிகவும் பட்டியலில் பின்னோக்கி சென்ற கவுதம் அதானி தனது சொத்தில் 29 விழுக்காட்டை இழந்து பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பட்டியலில் தற்போது 15 ஆவது இடம்பிடித்துள்ளார்.