பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வாங்கும் சொமேட்டோ..?
ஷிப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஷிப்ராக்கெட் என்ற நிறுவனத்தை சொமேட்டோ வாங்க காய் நகர்த்தி வருகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இதனை வாங்க சொமேட்டோ திட்டமிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டே கொக்கி போட்ட சொமேட்டோ 185 மில்லியன் டாலருக்கு வாங்க திட்டமிட்டது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சொமேட்டோ , அதிகாரபூர்வமாக தங்கள் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் சில வதந்திகளை முதலீட்டாளர்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. ஷிப்ராக்கெட் குறித்து தகவல் வெளியான உடனேயே சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்துவிட்டன. சுமார் 2விழுக்காடு வரை அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது. உள்ளூர் பிராண்டுகள் மற்றும் பொருட்கள் ஏற்றுமதி,இறக்குமதிக்கு ஷிப் ராக்கெட் என்ற நிறுவனம் பேருதவியாக இருக்கும் என்றும் சந்தையில் பேச்சு உலா வருகிறது. ஷாப்பிஃபை நிறுவனத்துடன் ஷிப்ராக்கெட் இணைந்துள்ளது. கடந்த அக்டோபரில் சொமேட்டோ ஹைப்பர் லோக்கல் சேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையில் டாடா 1எம்ஜி மருந்துகளையும் பெறும் வசதி இதில் அறிமுகமாகியுள்ளது. குருகிராமில் இயங்கி வரும் ஷிப் ராக்கெட் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடுகளை பெற்றுள்ளது. ஷிப் ராக்கெட் நிறுவனத்துக்கு மொத்தம் 42 கிடங்குகள் உள்ளன. இது மட்டுமின்றி புதிதாக குருகிராம், மும்பை, பெங்களூருவில் புதிதாக மூன்று கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த தரவுகளின்படி ஷிப்ராக்கெட் நிறுவனத்தின் வருவாய் 78%உயர்ந்திருக்கிறது. அதே நேரம் 341 கோடி ரூபாய் இழப்பு பதிவாகியுள்ளது.