ஏத்தர் புதிய பைக் பற்றி தெரியுமா?
இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் நல்ல லாபம் கொழித்து வருகின்றன. இந்தியாவில் ஓலா, ஏத்தர் நிறுவன பைக்குகள் சிறப்பான விற்பனையை செய்து வருகின்றன.
இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தனது 450 எக்ஸ் ஏபெக்ஸ் ரக பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்து 2500ரூபாய் முன்பணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது முன்பணம் செலுத்தினால் வரும் மார்ச் மாதம் டெலிவரி செய்யும் வகையில் பணிகள் நடக்கின்றன. அந்த பைக்கின் விலை 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு அந்த பைக்கில் என்னதான் இருக்கு என்று நீங்கள் கேட்கலாம், அதற்கும் அவர்களிடம் பதில் இருக்கிறது. வார்ப் பிளஸ் என்ற புதிய ரைட் மோட் அந்த வாகனத்தில் இருக்கிறதாம்.Eco, Ride, Sport, Warp+ ஆகிய வெவ்வேறு மோட்கள் மூலமாக எளிதாக பயணம் செய்யும் வகையில் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏத்தர் நிறுவன பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏபெக்ஸ் ரக பைக்கும் அதில் புதிய கலர் ஆப்சன்களும் அதனை வாங்க ஆர்வத்தை தூண்டி வருகின்றன. தற்போதுள்ள ஏத்தர் பைக்குகளைவிட ஏபெக்ஸ் ரக பைக்குகளில் சக்திவாய்ந்த மின்சார மோட்டார்கள் இடம்பிடித்திருக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது. மிக விரைவாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை இந்த பைக்கால் எட்டிப்பிடிக்க இயலும். 3.4 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட இந்த பைக்கில், முற்றிலும் புதிய டிஜிட்டல் டச் ஸ்க்ரீன், புளூடூத் வசதி, இ-சிம் வசதி , எல்ஈடி விளக்குகள் , மோனோ ஷாக் ரியர் சஸ்பென்ஷன் மற்றும் இரண்டு பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .